Monday, 5 May 2014

பாரதியின் வசன கவிதைகள்




கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

பாரதி கவிதையின் மீது வைத்திருந்த காதலுக்கும் ஆர்வத்திற்கும் அவன் வரிகளே சான்று.


சுவை புதிது!
வளம் புதிது!
சொற்புதிது!
சோதி மிக்க நவக்கவிதை!

என்றான் பாரதி. பெரும்பாலும் மரபு நீதியான யாப்பு முறைக்கு உட்பட்ட கவிதைகளைப் படைத்துவந்த பாரதி, இலக்கணத்திற்கு உட்படாத புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்றான். 

தமிழ் புதுக்கவிதையின் தந்தை

பாரதி தன் எழுத்துக்களில் சோதனை முயற்சி பல மேற்கொண்டவன். வசனத்தை மீறிய ஆனால் கவிதையின் பூரணத்துவத்தை அடையாத ஒரு முயற்சியாக அவன் படைத்த வசனகவிதைகளே காட்சிகள். இவை வசனங்கள் என்றும் கவிதைகள் எழுத குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்றும் சிலர் கருதுவர்.  ஆனால் காட்சிகள் முழுமைப்பெற்ற சிந்தனைக் கட்டுமானங்களாகவும், சொற்பின்னல்களாகவும் அமைந்துள்ளன.

எண்ணங்கள் அனுபவங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றால் வெவ்வேறு வித வடிவம் கொடுக்க விரும்பியவன் பாரதி. கவிதை அவன் உயிர் மூச்சாக இருந்தாலும் வசனம் பல வேளைகளில் கவிதையை விட வேகமும் அழகும், மனதில் துரிதமாக பதியும் உத்தியையும் பெற்றுவிடுகிறது என்பதை உணர்ந்ததால் தான் பாரதி வசனக் கவிதை என்ற சோதனை முயற்சியை மேற்கொண்டான்.

பாம்புப் பிடாரன் பற்றிப் பாரதி கூறுவது பாரதிக்கே பொருந்தும்.
இஃது சக்தியின் லீலை
அவன் உள்ளத்தில் பாடுகிறான். அது
குழலின் தொளையிலே கேட்கிறது
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து
அதிலே இசையுண்டாக்குதல் சக்தி

இதன் படி பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசை உண்டாக்கும் முயற்சி தான் பாரதியின் வசன கவிதைப் படைப்பு ஆகும்.

கருவி பல பாணன் ஒருவன்
தோற்றம் பல சக்தி ஒன்று

 பாரதிஎனும் பாணன் தன்னுள் ஜீவனுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த சக்திக்கு புறத்திலே பலப்பல வடிவு கொடுக்க விரும்பிய போது அவனுக்கு பயன்பட்ட கருவிகள் பல. அவற்றுள் ஒன்று வசனகவிதை.

பாம்புப்பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசன கவிதைக்கு ஒப்பிடலாம் என்றார் வல்லிக்கண்ணன்.  பாரதியின் வசன கவிதை முயற்சிகள் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டே போவதாகவும், பல வகைகளில் மாற்றி மாற்றிச் சுருள் சுருளாக வாசிப்பதாகவும் அமைந்துள்ளன.

பேராசிரியர் பி.மகாதேவன் கூறுவது போல தாகூரின் கீதாஞ்சலி இவ்வகையில் பாரதிக்கு உணர்ச்சியூட்டியிருக்கலாம். அல்லது மேலைக் கவிஞர் வால்ட்விட்மனின் கவிதைத் தாக்கத்தால் காற்றையும், கயிற்றையும், விண்ணையும், மண்ணையும் போற்றி பொருள் நிறைந்த வாக்கியங்களால் அடுக்கிக்கொண்டு போக விரும்பியிருக்கலாம். உள்ளத்தில் எழுகின்ற எண்ண ஓசைகளின் உருவ வெளிப்பாடாக அந்த எழுத்துக் கோர்வைகள் பிறந்திருக்கலாம். அல்லது பழங்கால மொழிகளைப் போல ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை, ஜகத்தினைப் போற்ற இப்புதிய வடிவத்தை கையாண்டிருக்கலாம். அவன் போற்றிய அத்தனையும் அன்றாடம் அனுதினமும் அவன் வாழ்வில் சந்தித்த அனுபவித்த உணர்ந்த, அவனின் ஆழ்நிலை உணர்வோடு பிணைந்த காட்சிகள். பாரதி தமிழுக்கு புது உடை அணிந்து அழகு பார்த்திருக்கிறான்.

பாரதியின் வசன கவிதை இனிமை, எளிமை, கவிதை, மெருகு, ஓட்டம் ஆகியவற்றைப் பெற்றுத் திகழ்கிறது.

உதாரணமாக,

நாம் வெம்மையை புகழ்கிறோம்
வெம்மை தெய்வமே! ஞாயிறே! ஒளிக்குன்றே!
அமுதாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே

வலிமையின் ஊற்றே ஒளிமழையே உயிர்கடலே – இந்த வண்ணம் கவிதை தொடர்ந்து,

ஒளியென்னும் திரையே
ஞாயிறே நின்னைப் பரவுகின்றோம். என்று முடிவடைகிறது.

   பாரதி காட்டும் காட்சிகளில் பல பகுதிகள் ஒளி பொதிந்த சிறு சிறு படலங்கள். வசன கவிதை என்ற புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள்.  மீண்டும் மீண்டும், படிக்க அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும் உணர முடியும். இவ்வாறு காட்சிகள் படைப்பின் மூலம் பாரதி தமிழ்ப் புதுக்கவிதையின்  தந்தையாகிறான் என்பது மிகை அல்ல.

No comments:

Post a Comment